கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.
பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதைதொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண படகில் உற்சாகத்துடன் சென்று பார்த்து ரசித்தனர்.
போலீசார் பாதுகாப்பு
இதேபோல், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.