குளச்சல் கடற்கரையில் மணல் சிற்ப போட்டி

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி குளச்சல் கடற்கரையில் மணல் சிற்ப போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிற்பங்கள் செய்து அசத்தினர்.

Update: 2022-03-26 17:31 GMT
குளச்சல், 
75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி குளச்சல் கடற்கரையில் மணல் சிற்ப போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிற்பங்கள் செய்து அசத்தினர்.
மணல் சிற்ப போட்டி 
75-வது சுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நாகர்கோவிலில் மினி மரத்தான் நடந்தது. இதையடுத்து நேற்று குளச்சல் கடற்கரையில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான மணல் சிற்ப போட்டி நடந்தது. 
போட்டியில் குமரி மாவட்டத்தில் உள்ள 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 
போட்டியின் போது மாணவ-மாணவிகள் மகாத்மா காந்தி, பாரதமாதா, பாரதியார், தேசியப் பறவையான மயில், இந்திய நாட்டின் வரைபடம் உள்ளிட்ட பல சிற்பங்களை மணலில் செய்து அசத்தினர். 
ஓவிய ஆசிரியர்கள்
இந்த மணல் சிற்பங்களை பார்வையிட்டு மதிப்பெண் வழங்குவதற்காக ஓவிய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது  மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஒரு முதியவர் தானாக முன்வந்து தானும் ஒரு மணல் ஓவியக் கலைஞர் என கூறி  சுதந்திர தின அமுத விழாவை சித்தரிக்கும் வகையில் மணல் சிற்பம் செய்தார். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு ஊழியர்கள் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்