நிலத்தின் மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை

நிலத்தின் மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-03-26 15:39 GMT
பொங்கலூர்:
பொங்கலூர் அருகே நிலத்தின் மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.50 லட்சம் கடன்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே எலவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிருச்சிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). இவரது மனைவி ஜோதிமணி (48). இவர்களது மகன் சண்முகசுந்தரம் (30). இவர்கள் விசைத்தறி தொழில் மற்றும் விவசாயம் செய்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு விசைத்தறி தொழிலில் முடக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்லடத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் தங்களுக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தை வைத்து ரூ.50 லட்சம் கடன் பெற்றனர். தொடர்ந்து விசைத்தறி தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் மேலும் பாதிப்பு அடைந்தது.
ரூ.65 லட்சம் கட்ட வலியுறுத்தல் 
இதனால் கடன் தவணை செலுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கோவிந்தசாமியின் வீடு மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு சென்று வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
கடந்த 4-ந்தேதி வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் விசைத்தறி கூடத்திற்கு சென்று அங்கு இருந்த கோவிந்தசாமியின் மனைவி ஜோதிமணியிடம் கடன், வட்டி சேர்த்து ரூ.65 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கடும் வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மனம் உடைந்த ஜோதிமணி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தென்னந்தோப்பில் மயங்கிக் கிடந்தார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
சுமார் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜோதிமணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டார் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் ஜோதிமணி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரூ.1 கோடி நஷ்ட ஈடு
எனவே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ேஜாதிமணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்