வருகிற 5-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகம் வருகை

அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க வருகிற 5-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தர இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-26 15:34 GMT
பெங்களூரு: அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க வருகிற 5-ந் தேதி பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தர இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

துமகூருவுக்கு அமித்ஷா வருகை

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, அடுத்த ஆண்டு (2022) நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தலுக்கு இப்போதில் இருந்தே தயாராகி வருவதால், கர்நாடகத்திற்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் வருகை தந்து தேர்தல் வியூகங்களை வகுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக வருகிற 1-ந் தேதி மத்திய உள்துறை மந்திரிஅமித்ஷா துமகூருவுக்கு வருகை தர உள்ளாா். அன்றைய தினம் துமகூரு சித்தகங்கா மடத்தில் நடைபெற இருக்கும் சிவக்குமார சுவாமியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதுபோல், பிரதமர் நரேந்திர மோடியும் கர்நாடகத்திற்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து உப்பள்ளி விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி 5-ந் தேதி...

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ந் தேதி கர்நாடகம் வருகை தர உள்ளார். பிரதமர் கர்நாடகம் வருவது உறுதியாகி இருக்கிறது. கர்நாடக அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகம் வருகை தர இருக்கிறார். ஏற்கனவே வருகிற 1-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா துமகூருவுக்கு வருகை தர உள்ளார். கூட்டுறவு துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள், நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார். ‘ஷீராபிவிருத்தி வங்கி’ திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் பால் உற்பத்தி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசும் போது தான் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி தெரியவரும். மேலிட தலைவர்கள் என்னை அழைத்தால், டெல்லிக்கு சென்று அவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். இதுவரை டெல்லிக்கு வரும்படி பா.ஜனதா மேலிடத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

கர்நாடகம் முதல் இடம்

கர்நாடகம் வரும் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசுமுறை பயணமாக வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கர்நாடக மந்திரிசபை குறித்து பேசவோ, ஆலோசனை நடத்தவோ திட்டமிடவில்லை. அதுபற்றி அவர்கள் பேசவும் மாட்டார்கள். கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த அரசின் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியில் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் அரசின் வருவாய் துறை உள்பட அனைத்து துறைகளையும் கண்காணித்து திட்டங்களை செயல்படுத்துவார்கள். 

இதுபோன்ற கமிட்டி உருவாக்கப்படுவது மாநிலத்திலேயே இதுதான் முதல் முறை. பெங்களூருவில் வருகிற நவம்பர் மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது கர்நாடகத்திற்கு என அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 3 முறை நடந்த காலாண்டு திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நேரடி முதலீட்டை ஈர்த்ததில் கர்நாடகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. 
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்