தருவைகுளம் கடலில் மீன் வளர்ப்பு திட்டம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் கடலில் மீன் வளர்ப்பு திட்டத்தை, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-26 14:23 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் கடலில் மீன் வளர்ப்பு திட்டத்தை, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மீன் வளர்ப்பு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தருவைகுளம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் நிதி உதவியின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பண்ணடுக்கு கடல்சார் நீருயிரி வளர்ப்பு தொழில் நுட்ப திட்டத்தின் மூலம் 5 மீனவர்களுக்கு 18 கூண்டுகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு நிகழ்ச்சி கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சாந்தகுமார் வரவேற்று பேசினார்.

அமைச்சர் வழங்கினார்
சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு 5 மீனவர்களுக்கு 75 சதவீதம் மீன் வளர்ப்பு கூண்டு மற்றும் 100 மகளிர் மீனவ குழுக்களுக்கு 60 சதவீதம் மானிய விலையில் கருவாடு வளர்ப்பும் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் அனைத்து துறைகளையும் முதன்மை துறைகளாக மாற்றுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். மீன் உற்பத்தியில் மீன் உணவு உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அருகே பாலாற்றில் ஜிலேபி வகை மீன்கள் வளர்க்கும் முறை பார்த்தோம். இதனை கூண்டில் முறையாக வளர்ப்பதற்கு மானியம் ரூ.20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீன், இறால் வளர்ப்பு ஆராய்ச்சி செய்யப்படுகிறது. மீன்பிடித் தடைக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய்யை உயர்த்தி வழங்குவதற்காக வாக்குறுதி அளித்தோம். தற்போது 200 லிட்டரில் இருந்து 500 லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை- எளிய மக்கள் நலனுக்காகவும், மீனவர்களின் உதவிக்காகவும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், மத்திய அரசு மூலம் நடவடிக்கை விரைந்து எடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
இதனை தொடர்ந்து கடலில் படகு மூலம் சென்று 18 கூண்டுகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமீர் சேவியர், தருவைகுளம் பங்குத்தந்தை வின்சன்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தருவைகுளம் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்