தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொது கழிப்பிடம் வேண்டும்
தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே உள்ளது, பாட்டவயல். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் பொது கழிப்பிடம் இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராமநாதன், பாட்டவயல்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தொட்டியில் குப்பை நிரம்பி வழகிறது. மேலும் பக்கவாட்டலும் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கபில், சிங்காநல்லூர்.
பாதுகாப்பற்ற குடில்கள்
கோத்தகிரி அருகே உள்ள ஆடுபெட்டு பகுதியில் தமிழக அரசின் விதிகளை மீறி சிலர் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பற்ற தற்காலிக குடில்களில் தங்க வைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஏற்கனவே பலமுறை வருவாய்த்துறையினர் எச்சரித்தும், அபராதம் விதித்தும், இந்த விதிகளை மீறிய செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி,பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் குடில்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன், கோத்தகிரி.
குண்டும், குழியுமான சாலை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் மூலனூர் ஊராட்சி ஜோத்தம்பட்டியில் இருந்து அடிவள்ளி செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் பொருட்களை அந்த சாலை வழியாகத்தான் உடுமலை, பொள்ளாச்சி பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் குண்டும், குழியுமான அந்த சாலையில் சென்று வருவதற்குள் கடும் அவதிப்பட வேண்டி உள்ளது. சில சமயங்களில் விளைபொருட்கள் அடங்கிய மூட்டைகள் வாகனத்தில் இருந்து கீழே சரிந்து விழுகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், ஜோத்தம்பட்டி.
பாலம் அகலப்படுத்தப்படுமா?
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் பி.ஏ.பி. வாய்க்கால் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராஜ்குமார், சுல்தான்பேட்டை.
விபத்தில் சிக்கும் அபாயம்
நெகமம் அருகே சேரிபாளையம் முதல் செட்டியக்காபாளையம் வழியாக தாமரைக்குளம் வரை தார்சாலை செல்கிறது. இந்த சாலையில் விபத்துகளை தடுக்க தேவணாம்பாளையம் பிரிவு, கோதவாடி பிரிவு, செட்டியக்காபாளையம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவில்லை. மேலும் வேகத்தடை மீது வெள்ளை நிறம் பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு அறிவிப்பு பலகை வைப்பதோடு வெள்ளை நிறம் பூசப்பட வேண்டும்.
செல்வம், நெகமம்.
இருக்கை வசதி இல்லை
கோவை எட்டிமடையை அடுத்த க.க.சாவடி போலீஸ் நிலையம் அருகே உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் இருக்கைகள் இல்லை. இதனால் பயணிகள் பஸ்சுக்காக கால் கடுக்க காத்து நிற்கும் நிலை உள்ளது. எனவே அங்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ராஜூ, எட்டிமடை.
கடும் துர்நாற்றம்
கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் மழைநீர் வடிகால் செல்லும் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
ஆறுமுகம், கிணத்துக்கடவு.
தேங்கி நிற்கும் மழைநீர்
கோவை மாநகராட்சி 20-வது வார்டு திருவள்ளுவர் நகரில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், கோவை.