டேவிஸ் பூங்காவை சீரமைக்க ரூ.95 லட்சம் ஒதுக்கீடு

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்காவை சீரமைக்க நகராட்சி ரூ.95 லட்சம் ஒதுக்கியது.

Update: 2022-03-26 14:09 GMT
ஊட்டி

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்காவை சீரமைக்க நகராட்சி ரூ.95 லட்சம் ஒதுக்கியது.

டேவிஸ் பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலக சந்திப்பு, மத்திய பஸ் நிலையம், சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளில் சாலையோர பூங்காக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்காவில் நடைபாதை, இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. 

மேலும் அங்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறை வசதியும்உள்ளது. பூங்காவின் நடுவில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பூங்காவில் தினமும் காலை, மாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வந்தனர். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டது. இதனால் நடைபாதையே தெரியாத வகையில் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து இருக்கிறது. 

திறந்தவெளி ‘பார்’

நுழைவுவாயிலை புதர் செடிகள் சூழ்ந்து உள்ளது. பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மேய்கின்றன. இதனால் ஆங்காங்கே அசுத்தம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபான பாட்டில்களை தூக்கி வீசிச்செல்கின்றனர். 

பூங்காவை அவர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர்.  எனவே டேவிஸ் பூங்காவை மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று ஊட்டி நகராட்சி மூலம் டேவிஸ் பூங்காவை சீரமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

ரூ.95 லட்சம் ஒதுக்கீடு

இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறியதாவது:-
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சம் செலவில் டேவிஸ் பூங்கா சீரமைக்கப்பட உள்ளது. அங்குள்ள புதர் செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. புதிதாக நீர்வீழ்ச்சி, கழிப்பிடம், இருக்கை வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. 

பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், ஓய்வெடுக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் பொதுமக்கள் கூறும்போது, டேவிஸ் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுத்ததுபோன்று சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள 2 பூங்காக்களையும் சீரமைக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்