கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் பணி

பெங்களூருவில் சிறப்பு பயிற்சி பெற கால்பந்து வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது

Update: 2022-03-26 14:09 GMT
கோத்தகிரி

பெங்களூரு சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து குழு மற்றும் கோத்தகிரி லோட்டஸ் கால்பந்து அகாடமி ஆகியவை சார்பில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை தேர்வு செய்து பெங்களூருவில் தங்க வைத்து தகுதி பெற்ற பயிற்சியாளர்களால் ஒரு மாதம் சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இளம் வீரர்களை தேர்வு செய்யும் பணி இன்றுதொடங்கியது.

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற கால்பந்து வீரர்கள் தேர்வில் 8, 10 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட தனித்தனி பிரிவுகளில் சுமார் 50 இளம் கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர். வயது அடிப்படையில் வீரர்களை விளையாட வைத்து தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வில் பங்கேற்ற வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்பட்டன. 2-ம் கட்டமாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு மைதானத்தில் கால்பந்து வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு பெறும் கால்பந்து வீரர்களுக்கு பெங்களூருவில் தங்குமிடம், உணவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, ஒரு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்