எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவு அரங்கம் அமைக்கும் பணி; அமைச்சர்கள் எ.வ.வேலு, கீதாஜீவன் ஆய்வு

கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவு அரங்கம் அமைக்கும் பணியை, அமைச்சர்கள் எ.வ.வேலு, கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-03-26 13:57 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் கரிசல் பூமி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடி செலவில் நினைவரங்கம், கி.ரா. சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தனர்.
கலெக்டர் செந்தில்ராஜ், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, தாசில்தார் அமுதா, தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார், கோவில்பட்டி உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் விக்னேஷ், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்து பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “கரிசல் பூமி எழுத்தாளர் கி.ராஜ நாராயணனின் நினைவரங்கம் கிராமிய மண் மணம் மாறாமல் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் 4 மாத காலத்தில் பணிகளை முடிக்க உத்தேசித்துள்ளோம். முதலில் இங்கு கி.ரா.வின் கற்சிலை தான் அமைக்க வேண்டும் என முடிவெடுத்து இருந்தோம். தற்போது அதனை மாற்றி வெண்கல சிலை அமைக்க முடிவெடுத்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறோம். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பு பகுதியில் ரூ.30.75 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்க நில எடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. திருச்செந்தூர் - பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் - தென்காசி, குற்றாலம் - செங்கோட்டை சாலை ரூ.438.73 கோடியில் 50.59 கி.மீ. விரிவாக்கம் செய்யும் பணிகள் கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

மேலும் செய்திகள்