கண்டக்டரை கண்டித்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள்: பஸ்களை ஓட்ட மறுத்து டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம்
பயணி டிக்கெட் எடுக்காததை கவனிக்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதனை அதிகாரிகளை கண்டித்து டிரைவர்-கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பூர்,
கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை நோக்கி நேற்று காலை மாநகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் பஸ்சில் ஏறி பஸ் பயணிகள் டிக்கெட் வாங்கி பயணம் செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு வடமாநில வாலிபர் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள், பாரிமுனை பஸ்நிலையத்துக்கு வந்ததும் இது தொடர்பாக பஸ் கண்டக்டரிடம் விளக்கம் கேட்டனர்.
அவரிடம் இருந்து சரியான பதில் வராததையடுத்து, கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ‘மெமோ’ அளிக்க போவதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்டர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்கெட் பரிசோதகர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது கண்டக்டருக்கு ஆதரவாக பாரிமுனை பஸ் நிலையத்தில் இருந்து மற்ற மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆதரவாக ஒன்று திரண்டனர். மேலும், அவர்களும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலையில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்வோர் பஸ் நிலையத்தில் குவிந்து இருந்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் கடும் பதற்றமும், அவதியும் அடைந்தனர்.
பஸ்நிலையம் நோக்கி வந்த பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் எஸ்பிளனேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கண்டக்டர், டிரைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை நடந்த ஒரு மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், போக்குவரத்து சீரானது.