மணிமேகலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மணிமேகலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராம புற மகளிர் சுய உதவி குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு செயல்பாட்டின் அடிப்படையில் 2021-22-ம் ஆண்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அதற்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகிறது. முன்மொழிவுகள் அனுப்பப்படுவதற்கான படிவங்கள் அந்தந்த வட்டார இயக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பாக செயல்பாட்டில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பேரூராட்சிகளின் குழுக்களும் தேர்விற்கு உட்பட்டதாகும்.
எனவே மேற்கண்ட விவரப்படி சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்களின் மற்றும் கூட்டமைப்புகளிடம் இருந்து முன்மொழிவுகள் பெற்று வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) தேதிக்குள் மகளிர் திட்டம் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு "திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை" என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.