கோவிலில் சாமி சிலைகளை திருடியவர் கைது

மேலூர் அருகே கோவிலில் சாமி சிலைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-25 21:31 GMT
மேலூர்
மேலூர் அருகே கோவிலில் சாமி சிலைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு
மதுரை மாவட்டம் மேலூரில் யூனியன் அலுவலகம் அருகில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவிலில் பூஜை பொருட்களை வைத்துள்ள அறையின் கதவை உடைத்து ஏற்கனவே வெண்கல முருகன் சிலை, வள்ளி சிலை, பூஜை தளவாட பொருட்கள் மற்றும் 120 கிலோ பித்தளை பொருட்கள் இரண்டு முறை திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாக தலைவர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மேலூர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு  பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 
தொடர் திருட்டை தடுக்க கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டது. 
கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளான். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவரவே அந்த ஆசாமி தப்பியோடினான. ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி பிடித்து மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி(62) என்பதும், இந்த கோவிலில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டில் ஈடுபட்டதும்,  முருகன், வள்ளி வெண்கல சிலை ஆகியவற்றை ஒரு கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 
இதனையடுத்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் ஆகியோர் அந்த இரண்டு சாமி சிலைகளையும் மீட்டனர். இவன் வேறு எங்கும் திருட்டில் ஈடுபட்டுள்ளானா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்