எரிபொருள் நிரப்பும் பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது
வள்ளியூர்:
எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
2-வது அணு உலை
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிதியுதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு, மின்உற்பத்தி நடந்து வருகிறது.
தற்போது 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வரும் வேளையில் 4-வது தடவையாக எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நேற்று காலை 7 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணி
இதன்மூலம் 2-வது அணுஉலையில் எரிந்த யுரேனியம் எரிபொருட்கள் அகற்றப்பட்டு, புதிதாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அணுஉலையில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் தானியங்கி எந்திரம் மூலம் நிரப்பப்படுகிறது.
அதே நேரத்தில் அணு உலையில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைப்படி ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
55 நாட்கள்
இந்த பணிகள் அனைத்தும் சுமார் 55 நாட்கள் நடைபெறும் எனவும், அதன்பிறகு பணிகள் முடிவடைந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது 1-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுதவிர மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.