ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகை அகற்றம்

ஐநூற்றுமங்கலத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட மாட்டு கொட்டகை அகற்றப்பட்டது.

Update: 2022-03-25 19:46 GMT
குளித்தலை, 
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கே.பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஐநூற்றுமங்கலம் பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு இல்லாத நபர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள ஏதுவாகவும், வீடு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு அரசு நிலத்தில் வீடு கட்டி கொடுப்பதற்காகவும் இடம் பார்க்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. 
அப்போது ஐநூற்றுமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் அப்பகுதியை சேர்ந்த 2 பேர் மாட்டு கொட்டகை கட்டியிருப்பது தெரியவந்தது.
மாட்டு கொட்டகை அகற்றம்
இதையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி உத்தரவின்பேரில் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மாட்டு கொட்டகையை அகற்றும் பணியை வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேற்று மேற்கொள்ள சென்றனர். அப்போது அங்கு கொட்டகை அமைத்திருந்த நபர்கள் கொட்டகையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து கே.பேட்டை ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்களே தாமாக முன்வந்து தங்களது கொட்டகையை பிரிக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 
இந்த இடத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடு கட்டி கொள்ள ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்