பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
ராணிப்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
முன்னாள் ராணுவவீரர்
ராணிப்பேட்டையை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 41), முன்னாள் ராணுவ வீரர். இவரது உறவினர் சென்னையை சேர்ந்த கார்த்திக் (40). இவர் சென்னையில் நெட் சென்டர் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை ஆனந்தன், கார்த்திக் ஆகிய இருவரும் திருவலம் நோக்கி, பெல் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனந்தன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, கார்த்திக் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
தடுப்புச்சுவரில் மோதி பலி
அக்ராவரம் ெரயில்வே பாலம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பாலத்தின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் கீழேவிழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.