கரூர் அரசு மருத்துவமனையில் சவாலான அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு சவாலான அறுவை சிகிச்சைகளை செய்து டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.
கரூர்,
சவாலான அறுவை சிகிச்சை
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு அரசு டாக்டர்கள் மூலம் சவாலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விபத்து
கரூர் மாவட்டம், வீரராக்கியத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவருக்கு விபத்து ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம்- 48 திட்டத்தின் மூலமாக அனுமதிக்கப்பட்டு சி.டி. ஸ்கேன் இலவசமாக எடுக்கப்பட்டு, வயிற்றுப்பகுதியில் சிறுகுடலானது கணையத்தின் அருகாமையில் கிழிந்து இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கமருந்து நிபுணர் மற்றும் செவிலியர் கொண்ட குழுவினரால் 5 மணி நேரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தீவிர அறுவை சிகிச்சையில் வைத்து செயற்கை சுவாசம் செலுத்தி, நோய்தன்மைக்கு ஏற்றவாறு மருந்துகள் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. 45 நாட்களுக்கு பின் வடிவேல் உடல் நலம் தேறினார். நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரூ.20 லட்சம் வரை...
விபத்துகளில் கணையத்திற்கு அருகே இருக்கும் சிறுகுடல் கிழிவது மிகவும் அரிதான ஒன்று. அறுவை சிகிச்சை செய்வதும் சவாலான ஒன்றாகும். இந்த அறுவை சிகிச்சையில் நான்கில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்தால் ரூ.20 லட்சம் வரை செலவாகியிருக்கும்.
இதேபோல் தாந்தோன்றிமலையை சேர்ந்த பிரவீன் (25) என்பவருக்கு கடந்த 13-ந்தேதி வயிற்று மேல்பகுதியில் கத்திக்குத்துபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நுரையீரல் மற்றும் குடல்பகுதியை பிரிக்கும் உதரவிதானத்தில் கிழிசல் ஏற்பட்டது. மேலும், கல்லீரல் கிழிந்து வயிறு முழுவதும் ரத்தம் கசிந்து காணப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து உதரவிதானம் மற்றும் கல்லீரல் சரிசெய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர மருத்துவ கவனிப்பு மூலம் குணமடைந்து கடந்த 21-ந்தேதி பிரவீன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கரும்புஞ்சை நோய்
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 55). இடது பக்க முக வலி மற்றும் இடது பக்க கண் வீக்கத்துடன் அழைத்து வரப்பட்டார். இவருக்கு இணைநோய்களான சர்க்கரை, ஆஸ்துமா, உடல்பருமன் ஆகியவை இருந்தன. நுண்நோக்கி மூலம் பரிசோதனை செய்து பார்த்ததில் கரும்புஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து முதற்கட்டமாக நுண்நோக்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தங்கதுரைக்கு கரும்புஞ்சை நோய் மிகவும் அதிகப்படியாக தாக்கியது கண்டறியப்பட்டது. எனவே இடது மேல் தாடை அகற்றி செயற்கை தாடை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2-ந்தேதி தங்கதுரைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் பல் சீரமைப்பு நிபுணரால் செயற்கை இடது மேல் அன்னம் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையானது தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டிருந்தால் ரூ.15 லட்சம் வரை செலவாகியிருக்கும். எனவே இது போன்ற அறுவை சிகிச்சைகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து அறுவை சிகிச்சைகளில் சிறப்பாக பணியாற்றிய அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் தெய்வநாதன், சங்கையராஜா, லெட்சுமணன், அக்ஷர், மயக்க மருந்து டாக்டர்கள் ராணி வசந்தகுமாரி, பிரேமகுமாரி, திலகம், தாரணி, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவு டாக்டர்கள் ஹேமலதா, ஷீபா, பிரபாகரன், பல் சீரமைப்பு மருத்துவர் செல்வமணி ஆகியோரை டீன் முத்துச்செல்வன் பாராட்டினார்.