ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து 2-வது நாளாக பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 17:50 GMT
வேலூர்

ஆந்திராவில் இருந்து 2-வது நாளாக பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல்

ஆந்திரமாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக-ஆந்திர மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில்  போலீசார் நடத்திய வாகன சோதனையில் 3 பஸ்களில் கடத்தி வரப்பட்ட 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 20 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம் ஜெகநாதபட்டியை சேர்ந்த லட்சுமணன் (வயது 50) கைது செய்யப்பட்டார்.

2 பேர் கைது

இந்தநிலையில் 2-வது நாளாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார்  கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். பஸ்சில் சந்தேகப்படும் வகையில் அமர்ந்திருந்த 2 பேர் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர்.

அந்த பைகளில் 5 பாக்கெட்டுகளில் தலா 2 கிலோ வீதம் 10 கிலோ கஞ்சா இருப்பது வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள், தேனிமாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த ராஜா (50), குமார் (43) என்பதும், ஆந்திரமாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து கஞ்சா வாங்கி தேனி மாவட்டத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்