மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

கீரப்பாளையத்தில் சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சம்மந்தம் கலக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-25 17:42 GMT
புவனகிரி, 

கீரப்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எம்.ஜி.ஆர். சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடம் தற்போது பராமரிக்கப்படாமல் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியை இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்த முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

தனியார் மண்டபத்திற்கு சென்றால் இதற்கென பல ஆயிரம் ரூபாயை செலவிட வேண்டி உள்ளது. எனவே இதை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சீர்வரிசை பொருட்களுடன் வந்தனர்

இந்த நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து  தரக்கோரி கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சம்மந்தம் கலக்கும் போராட்டம்  கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதில் மேளதாளங்களுடன், பெண்கள் சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் எடுத்து வந்தபடி போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நூதன போராட்டத்துக்கு  ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் முருகன், சிவராமன், செம்மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

பேச்சுவார்த்தை 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சேதமடைந்துள்ள சமுதாய கூடத்தை புதுப்பித்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதில், நிர்வாகிகள் சேரலாதன், ராஜேந்திரன், சிவனேசன், சோமசுந்தரம், ராஜதுரை, ஜெயந்தி, சுப்பிரமணியன், ராஜமாணிக்கம், தர்மதுரை, சதீஷ்குமார், கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவியரசன் நன்றி கூறினார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்