குடியாத்தத்தில் கடும் போக்குவரத்து நெரிசல். வாகன ஓட்டிகள் அவதி

குடியாத்தத்தில் நேற்றுமாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவித்தன.

Update: 2022-03-25 17:33 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் நேற்றுமாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்கித்தவித்தன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்

குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்ய மகாநதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே காமராஜர் பாலம், கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது. இந்த இரண்டு வழித்தடங்களில் தான் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூரிலிருந்து வரும் வாகனங்களும் வர வேண்டும். 

கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து உள்ளது. இதனால் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு செல்லும்போது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் மாலை சுமார் 6 மணியிலிருந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன் முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் வரை பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியார் சிலையில் இருந்து கெங்கையம்மன் கோவில் வழியாக தரைப்பாலம் செல்லும் வழியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது.

இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினர். வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் நீடித்தது.

இதுகுறிதச்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் காமராஜர் பாலத்திலிருந்து சுண்ணாம்புபேட்டை வழியாக ஆற்றில் தற்காலிக சாலை வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இதனால் மெல்ல மெல்ல போக்குவரத்து நெரிசல் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியது.

மேலும் செய்திகள்