பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-25 16:40 GMT
தர்மபுரி:-
 பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட தலைவர் மல்லையன், மாவட்ட பொருளாளர் வள்ளியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் கந்தசாமி, மனோகரன், கோவிந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பல்வேறு கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் பால்கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் அதிகரித்து வழங்க வேண்டும். ஆவின் பாலை 1 லிட்டருக்கு ரூ.3 வீதம் விற்பனை விலையை குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். பால் கொள்முதலை தினமும் தற்போது 32 லட்சம் லிட்டரில் இருந்து 1 கோடி லிட்டராக உயர்த்த வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் 5 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் செய்யவேண்டும். பாலுக்கான பாக்கியை உடனே வழங்க வேண்டும். பால் அளவு தரம் இவற்றை பால் வழங்கும் இடத்திலேயே குறித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்க வேண்டும். கால்நடை தீவனங்கள் தரமாக 50 சத மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்‌ மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் முத்து, மாவட்ட தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்