புஞ்சைகொல்லி ஆதிவாசி காலனியில் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள் விரைவில் கட்டி முடிக்க வலியுறுத்தல்

புஞ்சைகொல்லி ஆதிவாசி காலனியில் பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகள் விரைவில் கட்டி முடிக்க வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-03-25 16:39 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே புஞ்சைகொல்லி குழிவயலில் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் வசித்து வரும் குடிசை வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 

அத்துடன் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அந்த குடிசைகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து குழிவயலில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 11 தொகுப்பு வீடுகள் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் பணிகள் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது.

 இதனால் அந்த கட்டிடங்கள் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வருகிறது. எனவே இங்கு விரைவில் பருவமழைக்காலம் தொடங்க உள்ளதால் அதற்கு முன்பு பாதியில் விடப்பட்ட இந்த தொகுப்பு வீடுகள் கட்டிட பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்