மின்சார கேபிள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் 7 பேர் கைது
மின்சார கேபிள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், செம்பேடு கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு(வயது 47) என்பவர் தனது வீட்டின் அருகே மின் வயர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் மின் இணைப்பு வழங்கும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மின்சார வயர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டில்லிபாபு மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பாப்பையா(62), சக்கரவர்த்தி(42), சத்யராஜ்(33), பார்வதி(42), அமலா(31), ஹேமாவதி(27) ஆகியோர் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கள் போலீசார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.