திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருவாய் ரூ.3¼ கோடி
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ 3 கோடியே 28 லட்சம் கிடைத்துள்ளது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ரூ.3¼ கோடி உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமை தாங்கினார்.
கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா (தூத்துக்குடி), சங்கர் (நெல்லை), வெங்கடேஷ் (திருச்செந்தூர்), ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, நம்பி, இசக்கிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினர், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.3¼ கோடி
இதில் கோவில் நிரந்தர உண்டியலில் ரூ.3 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 811-ம், கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 120-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.18 ஆயிரத்து 64-ம், கோவில் உண்டியலில் ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 78-ம் என மொத்தம் ரூ.3 கோடியே 28 லட்சத்து 89 ஆயிரத்து 73-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
தங்கம்-வெள்ளி
மேலும் தங்கம் 2 கிலோ 700 கிராமும், வெள்ளிப்பொருட்கள் 25 கிலோ 168 கிராமும், வெளிநாட்டு பண நோட்டுகள் 164-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.