பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்
பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 16 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இங்கு பணியாற்றிய பெரும்பாலான ஆசிரியர்கள் மாறுதலாகி சென்றுவிட்டனர்.
தற்போது 6-வது முதல் 8-வது வகுப்பு வரை 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 10-ம் வகுப்பில் கணித ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
எனவே, அனைத்து பாட பிரிவுகளுக்கும் போதிய ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் சமாதானப்படுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் போதிய ஆசிரியர்களை நியமிக்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன் பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.