ஹிஜாப் அணிந்ததால் துன்புறுத்தல்- சட்டக்கல்லூரி பெண் முதல்வர் ராஜினாமா
ஹிஜாப் அணிந்ததால் துன்புறுத்தப்பட்டதாக மும்பை அருகே உள்ள சட்டக்கல்லூரி முதல்வர் பணியை ராஜினாமா செய்து உள்ளார்.
மும்பை,
ஹிஜாப் அணிந்ததால் துன்புறுத்தப்பட்டதாக மும்பை அருகே உள்ள சட்டக்கல்லூரி முதல்வர் பணியை ராஜினாமா செய்து உள்ளார்.
ஹிஜாப் பிரச்சினை
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர பெங்களூரு ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்தநிலையில் மராட்டியத்தில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக சட்டக்கல்லூரி முதல்வர் ஒருவர் பணியை ராஜினாமா செய்து உள்ளார்.
மும்பையை அடுத்த பால்கரில் உள்ள விவா சட்டக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த பெண் பத்துல் ஹமீது. இவர் ஹிஜாப் அணிந் ததற்காக கல்லூரி நிர்வாகத்தால் துன்புறுத்தப்படுவதாக கூறி அவரது பணியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை ஏற்படும் முன் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போது இங்கும் ஹிஜாப் பிரச்சினையாகி உள்ளது. கல்லூரி நிர்வாகம் எனக்கு ஒத்துழைக்க கூடாது என ஊழியர்களிடம் கூறியுள்ளது. இதன் காரணமாக எனது உதவியாளர் கூட எனது அன்றாட பணிகளுக்கு எனக்கு உதவி செய்வதில்லை" என கூறியுள்ளார்.
கல்லூரி நிர்வாகம் மறுப்பு
எனினும் இந்த குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் மறுத்து உள்ளது. அவர்கள், ''கல்லூரியில் படிக்கும் பல இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர், அதற்கு நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை '' என கூறியுள்ளர்.
சில மாதங்களுக்கு முன் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள பள்ளியிலும் 2 ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதி அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு இந்த பிரச்சினையை கல்வித்துறை மந்திரி, போலீஸ் அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.