கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்தாா்.

Update: 2022-03-25 13:58 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52). விவசாய சங்க செயலாளரான இவர் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, ஓடி சென்று ஞானசேகரனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறுகையில்,  பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெற்றேன். வீடு கட்ட அனுமதி அளிப்பதற்கு கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர் ஒருவர், என்னிடம் ரூ.30 ஆயிரம் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன்பேரில் வீட்டின் கட்டுமான பணியை முடித்து விட்டேன். ஆனால் வீடு கட்டியதற்கான தொகைக்குரிய ரசீது ஒன்றுகூட எனக்கு வழங்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மேலும் ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் வீட்டிற்கான தொகை கிடைக்கும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நான் வீடு கட்டியதற்கான தொகையை எனக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் என்னிடம் லஞ்சம் பெற்ற அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே ஞானசேகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்