99.5 டிகிரி தாக்கியது: நெல்லையில் சுட்டெரித்த வெயில்
நெல்லையில் 99.5 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் நண்பகலில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்
நெல்லை:
நெல்லையில் 99.5 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் நண்பகலில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்.
99.5 டிகிரி
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருப்பதையொட்டி வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை நேரத்திலேயே சூரியன் உதித்த உடன் வெயில் தனது கோர முகத்தை காட்டியது. மதியம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த வெயில் மாலை 4 மணி வரை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
நெல்லையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 99.5 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியது.
பொது மக்கள் பாதிப்பு
இதனால் நண்பகல் நேரத்தில் பெரும்பாலான மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். போக்குவரத்தையும் தவிர்த்தனர். இருசக்கர வாகனங்களில் பயணித்தோர் முகத்தில் அனல் காற்று வீசியது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பஸ்களில் பயணம் செய்தனர்.
தற்போது நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. வெயிலின் பாதிப்பு அதிகரித்து வருவதால் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களுக்கு தற்போது மவுசு அதிகரித்து உள்ளது.
மேலும் நுங்கு, இளநீர், தர்பூசணி போன்ற இயற்கையாக குளிர்ச்சி தரும் பொருட்களை வாங்கி சாப்பிட்டனர். குளிர்பான கடைகளிலும் மக்கள் குவிந்தனர். வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கும் நிலையில், தொடர்ந்து மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.