மணிகண்டம்
மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, கொலுக்கட்டைகுடி, குளவாய்பட்டி ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள கோரையாறு பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது மேக்குடி ஆலம்பட்டி சாலையில் வந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கோரையாறு பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய கோலார்பட்டியை சண்முகம்(வயது 45), நடுப்பட்டியை சண்முகம்(35), ஆலம்பட்டியை சேர்ந்த ராமு(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.