சுதந்திர திருநாள் அமுத பெருவிழா தொடங்கியது
அரியலூரில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா தொடங்கியது.
அரியலூர்:
அரியலூர் ஒற்றுமை திடலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கண்காட்சியை நேற்று கலெக்டர் ரமணசரஸ்வதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சி அரங்கில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசிய தலைவர்கள், தமிழக தியாகிகள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகிகள் குறித்த அறிந்த மற்றும் அறியப்படாத புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் காட்சி விளக்கத்துடன் கூடிய கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களையும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்காட்சி அரங்குகளையும், அரசின் திட்டங்கள், சாதனை விளக்க கண்காட்சியையும், கலை நிகழ்ச்சிகளையும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது.