வீடுபுகுந்து முகத்தில் மஞ்சள் பொடியை தூவி நகை-பணம் கொள்ளை

திருப்பரங்குன்றம் அருகே மஞ்சள் பொடியை தூவி நெசவுத் தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-03-24 20:36 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே மஞ்சள் பொடியை தூவி நெசவுத் தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முகத்தில் மஞ்சள்பொடி தூவி
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 44). நெசவு தொழிலாளி. நேற்று முன்தினம் இரவில் நாகராஜன் தனது மனைவி, குழந்தைகளுடன் மொட்டைமாடியில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் நாகராஜனின் தந்தை நரசிம்மன் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள ஒரு அறையில் தூங்கினார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் பூட்டிய கதவை தட்டினர். அப்போது நரசிம்மன் விழித்து எழுந்து கதவை திறந்துள்ளார். உடனே மர்ம மனிதர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மஞ்சள் பொடியை நரசிம்மன் மீது தூவியதாக தெரிகிறது. அதனால் நிலைகுலைந்து மயங்கிக் கீழே விழுந்தார்.
நகை-பணம் கொள்ளை
இதையடுத்து மர்ம மனிதர்கள் வீட்டுக்கு சென்று பீரோவைத் திறந்து அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம், மற்றும் ஒரு லேப்டாப் உள்ளிட்ட சிலபொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதற்கிடையில் காலையில் எழுந்து கீழே வந்த நாகராஜன் தந்தை நரசிம்மன் மயங்கி கிடப்பதை பார்த்து அதே பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார். இதுதொடர்பாக ஆஸ்டின் பட்டி போலீசில் நாகராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் முதியவர் முகத்தில் மஞ்சள் பொடி தூவி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்