தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-24 20:16 GMT
பள்ளி முன்பு கொட்டப்படும் குப்பைகள் 
தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலை பள்ளியின் நுழைவு வாயில் முன்பு குப்பைகளை கொட்டக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அதனை யாரும் கண்டுகொள்வது கிடையாது. அந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, தர்மபுரி.
குப்பைகள் அள்ளப்படுமா? 
சேலம் அன்னதானப்பட்டி வ.உ.சி. நகர் அடுத்த பாண்டு நகர் பகுதியில் குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி சாலையில் சிதறிக்கிடக்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், அன்னதானப்பட்டி, சேலம்.
வீணாகும் குடிநீர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து காரகுப்பம் செல்லும் சாலையில்  சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் சாலையின் நடுவே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. அங்கு 3 மாதங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாகுவதை தவிர்க்கலாம்.
-வீரபத்திரன், கிருஷ்ணகிரி.
கிணற்றுக்கு இரும்பு வேலி
சேலம் தாரமங்கலம் அருகே 10-வது வார்டில் தண்டு மாரியம்மன் கோவில் எதிரில் திறந்த வெளியில் கிணறு உள்ளது. தண்ணீர் நிரம்பியுள்ள இந்த கிணற்றின் அருகில் குழந்தைகள் விளையாடுகின்றனர். சில நேரங்களில் கிணற்றை குழந்தைகள் எட்டிப்பார்க்கின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி திறந்தவெளியில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வேலி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.சதீஸ்குமார், தாரமங்கலம், சேலம்.
சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் வாழப்பாடி- தம்மம்பட்டி சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டில் அடிக்கடி ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமல்ராஜா, வாழப்பாடி, சேலம்.
வேகத்தடை அவசியம்
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி, காமாட்சி நகர், சந்தோஷ் தெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், சின்ன திருப்பதி, சேலம்.
திருடர்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாம்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி, புதுக்குட்டை பகுதிகளில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள மின்மோட்டார்களின் வயர்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர். இப்படி திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
-சோமு, பெருமாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்