வெப்படை அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
வெப்படை அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியயை திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம்:
பிளஸ்-1 மாணவர்
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் இருந்தனர். இதில் 2-வது மகனான ரிதுன் (வயது 16), தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ரிதுன் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் வகுப்பில் பக்கத்தில் இருந்த மாணவர்களிடம் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. அவனை ஆசிரியை திட்டி, வகுப்பை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரிதுன் பள்ளியை விட்டு வெளியேறினார்.
ரெயிலில் பாய்ந்து தற்கொலை
பின்னர் காலை 11 மணிக்கு பள்ளி அருகில் உள்ள தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரிதுன் உடல் சிதறி பலியாகி கிடந்ததை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வெப்படை போலீசார் மற்றும் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த ரிதுனின் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் ரிதுன் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது போலீசார் ரிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரிதுனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவ-மாணவிகள் ஆசிரியை திட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரிதுனின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விசாரணை நடத்தி, மாணவரின் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
உடலை வாங்க மறுப்பு
இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் ரிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ரிதுனின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அதுவரை உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.