பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று கொடுக்கப்படும்-புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேட்டி

நாமக்கல் மாவட்டத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று கொடுக்கப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறினார்.

Update: 2022-03-24 18:49 GMT
நாமக்கல்:
புதிய போலீஸ் சூப்பிரண்டு
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல்லில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் புகார்களை தெரிவிக்கலாம். அதேநேரம் போலீஸ் நிலையங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் தகவல் கொடுத்தாலே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற நிலை உருவாக்கப்படும்.
பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்களை பொறுத்த வரையில் புகார் வந்தவுடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்படும். இதுதவிர அரசின் இதர துறை அதிகாரிகளுடன் இணைந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசாருக்கு பணிச்சுமையை குறைக்க வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அது சுழற்சி முறையில் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்து
நாமக்கல் மாவட்டத்தின் 27-வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்ட சாய்சரண் தேஜஸ்வி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ள இவர், திருநெல்வேலி, குளச்சல், வடசென்னை பகுதிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய போலீஸ் சூப்பிரண்டுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்