சைல்டுலைன் மூலம் 60 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர் மாவட்ட சைல்டுலைனுக்கு வந்த அழைப்பின் பேரில் 60 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர்
வேலூர் மாவட்ட சைல்டுலைனுக்கு வந்த அழைப்பின் பேரில் 60 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்ட சைல்டுலைன் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணைத்தலைவர் பைரவமூர்த்தி, முதன்மை மேலாளர் செல்வகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் இயக்குனர் சுவாமிநாதன் வரவேற்றார். சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சைல்டுலைன் செயல்பாடுகளை விளக்கி கூறினார்.
கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் மற்றும் துன்பத்தில் தவிக்கும் பிறந்த பச்சிளம் குழந்தை முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு சைல்டுலைன் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக இலவச தொலைபேசி எண்ணிற்கு (1098) வரும் அழைப்புகள் மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
60 திருமணம் தடுத்து நிறுத்தம்
சைல்டுலைன் அலுவலகத்துக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை பொதுமக்களிடம் இருந்து 525 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் 99 அழைப்புகள் சிறுமிகளின் திருமணங்கள் நிறுத்தம் தொடர்பானவையாகும். அதன்பேரில் 60 சிறுமிகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 19 பேருக்கு ஏற்கனவே திருமணங்கள் முடிந்து விட்டன. 8 திருமணங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 3 அழைப்புகள் தெரிவித்த முகவரி கண்டுபிடிக்க முடியவில்லை. 9 சிறுமிகளின் திருமணங்கள் பொய்யான தகவல்களாகும்.
18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் நடைபெறுவது குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக சைல்டுலைன் 1098 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கலெக்டர், குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்கவும், குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.
இதில், இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் யுவராணி, குழந்தைகள் நலக்குழும தலைவர் சிவகலைவாணன் மற்றும் குழந்தைகள் நலன்சார்ந்த துறையினர் பலர் கலந்து கொண்டனர்.