வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

கடலூரில் நடந்த வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-03-24 18:33 GMT
கடலூர், 

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூரில் நேற்று டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு வரும்முன் காப்போம் என்ற திட்டத்தை உருவாக்கி, இத்திட்டத்தின் மூலமாக பொது மக்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் மூலமாக 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள திட்டமிட்டு, மருத்துவர்கள் மூலம் நோய் கண்டறியும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனை

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம்களில் 28 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நோயின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்ட முகாம்களின் மூலமாக கடலூர் மாவட்டத்தில் 38 முகாம்கள் மூலம் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். எனவே அனைத்து பகுதி மக்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே பரிசோதனை மேற்கொண்டு, ஆரம்ப நிலையில் நோயின் தன்மையை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் நோயின் தன்மைக்கேற்ப மேல் சிகிச்சை மேற்கொள்ள, தலைமை அரசு மருத்துவமனையில் இலவசமாகவும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என்றார். 

பின்னர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, மாநகராட்சி மேயர் சுந்தரி,  மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், நகர செயலாளர் ராஜா மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்