சூளகிரி அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் பள்ளி மாணவர் சாவு வேடிக்கை பார்த்தபோது பரிதாபம்

சூளகிரி அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் பள்ளி மாணவர் சாவு வேடிக்கை பார்த்தபோது பரிதாபம்

Update: 2022-03-24 17:51 GMT
சூளகிரி:
சூளகிரி அருகே நடந்த எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் வேடிக்கை பார்த்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்றனர். இதையடுத்து எருதுவிடும் விழா தொடங்கி நடந்தது.
இந்த விழாவை காண சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தை சேர்ந்த செம்பப்பா மகன் திவாகர் (வயது 15) தனது நண்பர்களுடன் சப்படி கிராமத்திற்கு வந்து இருந்தான். இவன் அட்டகுறுக்கியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
கூட்டத்திற்குள் பாய்ந்தது
எருதுவிடும் விழாவில் மைதானத்தில் ஆக்ரோஷமாக சுற்றி, சுற்றி வந்த காளைகளில் ஒன்று வேகமாக ஓடி வந்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் பாய்ந்தது. அப்போது விழாவை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திவாகரை காளை முட்டியது. இதைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடினர். 
காளை முட்டியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய திவாகரை விழா ஏற்பாட்டாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். 
விசாரணை
இதுபற்றிய தகவல் அறிந்து சென்ற சூளகிரி போலீசார் திவாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காளை முட்டி மாணவர் இறந்ததால் எருதுவிடும் விழா பாதியில் நிறுத்தப்பட்டது. 
காளை முட்டி பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்