ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்தல்

போடியில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-24 17:48 GMT
உத்தமபாளையம்: 

போடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தார் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் பறக்கும் படையினர் போடி மீனாட்சிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஜீப்பை பறக்கும் படையினர் மறித்தனர். ஆனால் அந்த ஜீப்பை டிரைவர் நிறுத்தவில்லை. 

இதனால் பறக்கும் படையினர் தங்களது வாகனத்தில், அந்த ஜீப்பை விரட்டி சென்று போடி கட்டப்பொம்மன் சிலை அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் ஜீப்பை சோதனை செய்தனர். அதில், 1,300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜீப்பை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் போடியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 45) என்று தெரியவந்தது. போடியில் இருந்து கேரளாவுக்கு அவர் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக தெரிவித்தார். இந்தநிலையில் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல் பிடிபட்ட ஈஸ்வரனும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்