டாஸ்மாக் கடை மீது மதுபாட்டில்களை வீசி ரகளை

திண்டிவனத்தில் டாஸ்மாக் கடை மீது கல், மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-24 17:38 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த பாண்டு மகன் செல்வகுமார்(வயது 45), திண்டிவனம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(47) ஆகியோர் உள்ளனர். 
இந்த கடைக்கு நேற்று மதியம் ஒருவர் மதுபோதையில் மதுபாட்டில் வாங்க வந்தார். அப்போது அவர் ரூ.130 கொடுத்து குவாட்டர், பீர் தருமாறு தகராறில் ஈடுபட்டார். இதனால் விற்பனையாளர்களுக்கும், அந்த நபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த சக மதுபிரியர்கள், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

கல், மதுபாட்டில்கள் வீச்சு 

இந்த நிலையில் 10 பேர் கொண்ட கும்பல், நேற்று இரவு 8.45 மணிக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு வந்தது. அங்கு கிடந்த கற்களை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடை மீது சரமாரியாக வீசியது. பின்னர் அந்த கும்பல் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த காலி மதுபாட்டில்களை எடுத்து விற்பனையாளர்கள் மீது வீசியது. 
விற்பனையாளர்கள் இருந்த பகுதியை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளதால் அதில் விழுந்த மதுபாட்டில்கள் சுக்குநூறாக நொறுங்கியது. அந்த சமயத்தில் கும்பலுடன் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ஒரு காலி பீர் பாட்டிலை எடுத்து, அதனை உடைத்து விற்பனையாளர்களை குத்த முயன்றார். இதை சுதாரித்துக்கொண்ட விற்பனையாளர்கள் விலகிக்கொண்டனர். 

போலீசை கண்டதும் ஓட்டம் 

தொடர்ந்து அந்த கும்பல் ஆபாசமான வார்த்தைகளால் விற்பனையாளர்களை திட்டினர். இந்த கும்பலை கண்டதும், அந்த பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்த சிலர், அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்தனர்.  போலீசாரை கண்டதும் அந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடி தலைமறைவானது. மேலும் இது தொடர்பாக செல்வகுமார், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, டாஸ்மாக் கடை மீது கல், காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தற்காலிக பஸ் நிலையமான திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்