தீவனூரில் கோவில், நூலகத்தில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
தீவனூரில் கோவில், நூலகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. இதனை அடிப்படை வசதியுள்ள வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லாததால் செல்லியம்மன் கோவில் வளாகத்திற்கு நெல் கொள்முதல் நிலையம் மாற்றப்பட்டது.
தினமும் 1000 நெல் மூட்டைகள்...
இந்த கொள்முதல் நிலையத்திற்கு மயிலம், ஒலக்கூர், வல்லம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விற்பனை செய்வதற்காக நெல் மூட்டைகளை கொண்டு வருகிறார்கள். இங்கு தினமும் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனடியாக லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படவில்லை. அவைகள் அனைத்தும் கோவிலிலும், அருகில் உள்ள நூலக பகுதியிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அலுவலகமான நூலகம்
அதுமட்டுமின்றி நூலகத்தை பாதியாக சுருக்கி, அதில் நெல் கொள்முதல் நிலைய அலுவலகம் செயல்படுகிறது. இதனால் நூலகத்தை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், போட்டித்தேர்வுக்காக தயாராகி வரும் இளைஞர்கள், வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளும் அங்கு பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு போதிய அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே கோவில், நூலகத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.