2-வது நாளாக சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்லில், 2-வது நாளாக சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-24 16:57 GMT
திண்டுக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மதியம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

 அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என்றும், அது தொடர்பாக கோட்ட பொறியாளர் நேரில் வந்து உறுதிஅளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

ஆனால் கோட்ட பொறியாளர் நேரில் வரவில்லை. பிற அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்காத சாலை பணியாளர்கள் அங்கேயே இரவில் தங்கினர். மேலும் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது. இதற்கு கோட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.

 இதில் மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், அரசு ஊழியர் சங்க செயலாளர் விவேகானந்தன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் மற்றும் நிர்வாகிகள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள் காலை, மதிய உணவை கோட்ட பொறியாளர் அலுவலகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்