உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலக பணியில் மராத்தி கட்டாயம் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலக பணியில் மராத்தியை கட்டாயமாக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-24 15:16 GMT
கோப்பு படம்
மும்பை, 
உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலக பணியில் மராத்தியை கட்டாயமாக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
மராத்தி கட்டாயம்
மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலக பணியில் மராத்தியை கட்டாயமாக்கும் சட்டத்திருத்த மசோதா  சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாநில அரசால் அமைக்கப்பட்ட மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், மத்திய அரசின் அமைப்புகள் கட்டாயம் மராத்தியில் தான் அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பொது மக்களிடம் பேசும் போதும், பணிகளின் போதும் மராத்தியை தான் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசு பணிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதர்கள் போன்றவர்களிடம் பேசும் போது இந்தி அல்லது ஆங்கிலத்தை பயன்படுத்தலாம் என மந்திரி சுபாஷ் தேசாய் சட்டசபையில் தெரிவித்தார்.
தேர்தல் நேர பாசம்
இந்த மசோதா குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. யோகேஷ் சாகர் பேசுகையில், தேர்தல்கள் (மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சி தேர்தல்) வரும் நிலையில் மராத்தியின் மீது அரசுக்கு அதிக பாசம் வந்து உள்ளதாக தெரிவித்தார். 
இதற்கு பதில் அளித்த மந்திரி சுபாஷ்தேசாய், " இந்த விவகாரத்தை நாம் அரசியலுடன் தொடர்புபடுத்த கூடாது. தேர்தல்கள் வருவதால் நாம் பணி செய்யாமல் இருக்க முடியுமா?. தேர்தல் வரும், போகும் இதுபோன்ற மசோதாவை கொண்டு வருவது நமது உரிமை" என்றார்.

மேலும் செய்திகள்