இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் முன்பு கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் முன்பு கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
கணவன்-மனைவி பிரச்சினை
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி செல்வராணி (வயது 27) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு முத்துக்குமார் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனியாக வசித்து வந்த செல்வராணி திடீரென கணவர் முத்துக்குமார் வீட்டில் குடியேறியுள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
இதனை கண்டித்து முத்துக்குமார் அண்ணன் சத்ய பிரகாஷ் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து சென்று விட்டாராம். இதை கண்டித்து சம்பவத்தன்று செல்வராணி தன்னை கணவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் எனவும், வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பாத்திரங்களை தர வேண்டுமெனவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
போலீசார் விசாரணை
உடனே போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி அறிவுரை கூறி, வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மெஞ்ஞானபுரம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.