கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதிய மின்னணு ரேஷன்கார்டு; கலெக்டர் செந்தில்ராஜ்
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் புதிய மின்னணு ரேஷன்கார்டு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்
தூத்துக்குடி:
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் புதிய மின்னணு ரேஷன்கார்டு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரேஷன்கார்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக புதிய மின்னணு ரேஷன்கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013 நடைமுறைக்கு வந்த பின்பு மின்னணு குடும்பஅட்டை கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களில், குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர்களான விளிம்பு நிலை மக்கள் (நரிக்குறவர் போன்றோர்), பட்டியல் இனத்தவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய மின்னணு குடும்பஅட்டை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
நீக்கல் சான்று
நலிந்த பிரிவினர்களில் கணவனால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று அல்லது தனியாக வசித்து வரும் பெண்களுக்கு குறிப்பாக நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத நிலையில், கணவர் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் பெயரை உரிய வாக்குமூலம் பெற்று குடும்பதலைவரின் அனுமதியில்லாமல் நீக்கம் செய்து, நீக்கல் சான்று வழங்க தமிழக அரசு உத்திரவிட்டு உள்ளது.
எனவே, புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்து பெற்றுள்ள பெண்கள் தனது கணவரின் குடும்ப அட்டையில் உள்ள பெயரினை கணவரின் அமைதியின்றி நீக்கம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரை அணுகி நீக்கல் சான்று பெற்று புதிய மின்னணு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.