‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வெளிச்சம் வேண்டும்
சென்னிமலை வவ்வால் காடு வீதியில் மின்கம்பம் உள்ளது. இதில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். உடனே மின்கம்பத்தில் விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னிமலை.
இடையூறாக கற்கள்
தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலையில் கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், தாளவாடி.
குடிநீர் பற்றாக்குறை
பெருந்துறை பேரூராட்சியில் உள்ள எல்லமேடு, முத்து நகர் பகுதியில் பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணிநேரம்தான் வழங்கப்படுகிறது. கோடை கொளுத்தும் இந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவிக்கிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண்பார்களா?
பொதுமக்கள், எல்லமேடு.
மின்விளக்கு ஒளிரவில்லை
கொடுமுடி காங்கேயம் ரோடு பகுதியில் கடந்த 15 நாட்களாக மின்விளக்கு ஒளிரவில்லை. இதனால் மாலை நேரத்துக்கு மேல் பெண்கள், முதியவர்கள் தெருவில் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே கொடுமுடி பேரூராட்சி நிர்வாகத்தினர் கொடுமுடி காங்கேயம் ரோடு பகுதியில் மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கொடுமுடி.
ஆபத்தான பாதாள சாக்கடை மூடி
ஈரோடு வாய்க்கால்மேடு பசுமை பாரதிநகரில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடை மூடியின் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் நடந்து செல்பவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான பாதாள சாக்கடையை மூடியை அகற்றிவிட்டு, புதிய மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயத்திரி, பாரதிநகர்.
குண்டும்-குழியுமான ரோடு
அந்தியூர்-பர்கூர் ரோட்டில் உள்ளது கிருஷ்ணாபுரம். இந்த பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் வாகன ஓட்டிகள் தட்டுதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். உடனே குண்டும், குழியுமான ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன் புதுப்பாளையம்
பாராட்டு
கோபி கிட்டாசாமி வீதியில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடையில் வர்ணம் பூசாததால் அது இருப்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி வந்தனர். இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது வேகத்தடைக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.