தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம்- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி தெரிவித்து உள்ளார்.
தென்னை மரங்கள்
ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 200 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இயற்கை இடர்பாடு, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிர்வால் தென்னை மரங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்பட்டால் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெறலாம்.
காப்பீடு செய்வதற்கு தென்னை மரங்களை தனி பயிராகவோ, ஊடு பயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ குறைந்தது 5 மரம் சாகுபடி செய்யப்பட்டு இருக்க வேண்டும். குட்டை, ஒட்டு ரக தென்னை மரங்கள் 4-ம் ஆண்டு முதல், நெட்டை மரங்கள் 7-வது ஆண்டு முதல் என 60 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
காப்பீடு
ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்களை மட்டும் காப்பீடு செய்ய முடியும். காப்பீடு செய்ய வேண்டிய மரங்களுக்கு வர்ணம் பூசி 1, 2, 3 என்ற வரிசையில் எண்கள் குறிப்பிட்டு விவசாயியுடன் புகைப்படம் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். 4 வயது முதல் 15 வயதுடைய மரம் ஒன்றுக்கு 2 ரூபாய் 25 காசுகளும், 16 வயது முதல் 60 வயது வரை மரம் ஒன்றுக்கு 3 ரூபாய் 50 காசுகளும் தவணை தொகையாக செலுத்த வேண்டும்.
காப்பீடு செய்யும் படிவத்துடன், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிட்டா, அடங்கல், புல எண் வரைபடம், விவசாயி புகைப்படம், சுய விவரம், காப்பீடு செய்வதற்கான வேளாண்மை உதவி இயக்குனர் சான்று இணைத்து, ‘அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் இணை இயக்குனர் சின்னசாமி கூறினார்.