சிவகிரி:
நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிய லாரி, கேரள மாநிலம் கொல்லத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோடு லத்திவாடியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27) ஓட்டிச் சென்றார். நேற்று மதியம் தென்காசி மாவட்டம் சிவகிரி காப்பிகொட்டை தோட்டம் அருகில் சென்றபோது, அந்த வழியாக பழைய பிளாஸ்டிக் பொருட்கள் லோடு ஏற்றி வந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 2 லாரிகளின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. அவற்றை அப்பகுதியினர் அள்ளி சென்றனர். விபத்தில் 2 லாரி டிரைவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.