மங்களூரு அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் பாதயாத்திரை

மங்களூரு அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பல்வேறு அமைப்பினர் பாதயாத்திரை நடத்தினர்

Update: 2022-03-23 21:04 GMT
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உடுப்பி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முக்கா-எணன்.ஐ.டி.கே. என்ற இடத்தில் சுங்கச்சாவடி உள்ளது. இது மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. சுங்கச்சாவடிகள் மாநகராட்சி எல்லைப்பகுதிகளில் இருக்கக்கூடாது என்ற விதி அமலில் இருக்கிறது. இந்த விதிகளை மீறி சுங்கச்சாவடி அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் கூறியுள்ளனர். மேலும் அங்கிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு சுங்கச்சாவடி உள்ளது. நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். 

ஆனால் இங்கு 9 கிலோ மீட்டர் இடைவெளியிலேயே அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதை கண்டித்தும், உடனடியாக அங்குள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று உடுப்பி மாவட்டம் படுபித்ரி தாலுகா எஜமாடி சுங்கச்சாவடியில் இருந்து மங்களூரு அருகே உள்ள முக்கா சுங்கச்சாவடி வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் பாதையாத்திரை போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாதயாத்திரையாக வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

மேலும் செய்திகள்