உறங்கான்பட்டியில் மஞ்சு விரட்டு; காளைகள் முட்டி 60 பேர் காயம்
மேலூர் அருகே உறங்கான்பட்டியில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் முட்டி 60 பேர் காயம் அடைந்தனர்.
மேலூர்
மேலூர் அருகே உறங்கான்பட்டியில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் முட்டி 60 பேர் காயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர்நாடு உறங்கான்பட்டியில் பிரசித்தி பெற்ற மந்தை கருப்பண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சு விரட்டு நடைபெறுவது வழக்கம். கோவிலின் முன்பு ஒரே நேரத்தில் மாடுகளை மஞ்சு விரட்டில் அவிழ்த்து விடுவதற்கு பழமையான வாடிவாசல் உள்ளது. கொரனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இங்கு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க் கும் மேற்பட்ட காளை மாடுகள் சரக்கு எற்றும் வாகனங்களில் உறங்கான்பட்டிக்கு கொண்டுவரப்பட்டன. பாரம்பரிய வழக்கப்படி கோவிலில் சாமி கும்பிட்டு கோவில் மாடுகளுக்கு மரியாதை செய்த பிறகு வாடிவாசலில் மஞ்சு விரட்டு தொடங்கியது.
காளைகள் அதிக அளவில் வராததால் வாடிவாசல் தவிர சுற்றி உள்ள வயல் வெளியில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த காளை மாடுகளை வாலிபர்கள் மடக்கி பிடித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மஞ்சு விரட்டை கண்டுகளித்தனர். மாடுகளுக்கு பயந்து பலர் மரங்களில் ஏறி வேடிக்கை பார்த்தனர்.
60 பேர் காயம்
மாடுகள் முட்டி 60 பேர் காயமடைந்தனர். மேலூர் வட்டார சுகாதார துறை தலைமை டாக்டர் அம்பல சிவனேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் அமைத்து காயமடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் முதலுதவிக்கு பின் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.