காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு வாலிபர் தற்கொலை

கருங்கல் அருகே காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-23 19:46 GMT
கருங்கல்:
கருங்கல் அருகே காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதலுக்கு எதிர்ப்பு
கருங்கல் கல்வெட்டான் குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகன் பிரபின் ஸ்டான்லி (வயது 27). தொழிலாளியான இவர் கடந்த ஒரு மாதமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
பிரபின் ஸ்டான்லி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், பிரபின் ஸ்டான்லியை கண்டித்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. அங்கு இருதரப்பினரையும் சமாதானம் பேசி போலீசார் அனுப்பி வைத்தனர். 
தற்கொலை
அதன்பிறகு பிரபின் ஸ்டான்லி மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்தநிலையில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு சென்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவருடைய தாயார் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் உறவினர்கள் பிரபின் ஸ்டான்லி உடலை கீழே இறக்கி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்