கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் அவதி
நாலுவேதபதி - திருத்துறைப்பூண்டி- தலைஞாயிறு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
வெளிப்பாளையம்;
நாலுவேதபதி - திருத்துறைப்பூண்டி- தலைஞாயிறு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
ஒரு பஸ் மட்டுமே இயக்கம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி - திருத்துறைப்பூண்டி மார்க்கத்திலும், திருத்துறைப்பூண்டி - தலைஞாயிறு மார்க்கத்திலும் காலை மற்றும் மாலை நேரங்களில் தலா ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இந்த 2 பஸ்களில் நிற்க கூட முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனால் மாணவர்கள், படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கி கொண்டும் தான் பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
குறிப்பாக மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்ல அச்சப்பட்டு பஸ்சை தவற விட்டு விடுகிறார்கள். எனவே பள்ளிக்கு செல்லும் நேரம், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகளின் பெற்றோர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கூடுதல் பஸ் இயக்கப்பட வில்லை.
எனவே பள்ளி நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ- மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.